சேமி
  • புதிய பட்டியல்
மேலும்
    சேமி
    • புதிய பட்டியல்
823/ரபி/1446 , 26/செப்டம்பர்/2024

சரியான ஹிஜாபின் பண்புகள்

கேள்வி: 6991

இஸ்லாமிய ஹிஜாபில் இருக்க வேண்டிய பண்புகள் என்ன? ஏனெனில் பல தோற்றங்களில் இன்று ஹிஜாப் உள்ளது. எனக்கு டென்மார்க்கைச் சேர்ந்த ஒரு தோழி இருக்கின்றார். சில நாட்களுக்கு முன்னால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தற்போது அதில் மகிழ்ச்சியாக உள்ளார் - அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் - அவர் தற்போது ஹிஜாப் அணிய விரும்புகின்றார். எனவே, ஹிஜாப் என்பது நீண்டதொரு முழு ஆடையாக இருக்க வேண்டும் என்ற விடயத்தை உணர்த்தும் ஆதாரங்களைத் தர முடியுமா? உங்கள் பதில் அவருக்கு மிக அவசியமாக உள்ளது.

பதில்

அல்லாஹ்வுக்கே புகழும், இறைவனின் தூதர் மீது பிரார்த்தனையும் சாந்தியும் உண்டாகட்டும்,

இமாம் அல்பானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்:

“ஹிஜாபின் நிபந்தனைகள்: 

1. விதிவிலக்கு அளிக்கப்பட்டவற்றைத் தவிர உடல் முழுவதையும் மறைத்தல்.

 அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான் “தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்” அல்லாஹ் மேலும் கூறுகின்றான், “நபியே! நீங்கள் உங்களுடைய மனைவிகளுக்கும், உங்களுடைய பெண் மக்களுக்கும், நம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை (தங்கள் முகங்களில்) இறக்கிக் கொள்ளும்படி நீங்கள் கூறுங்கள். அதனால், அவர்கள் கண்ணியமானவர்கள் என அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபை செய்பவ னாகவும் இருக்கின்றான்.”

முதல் வசனத்தில் அலங்காரம் அனைத்தையும் மறைப்பது கட்டாயம் என்றும் அந்நியர் முன்னிலையில், - அவர்களது நாட்டம் இன்றி தானாக வெளிப்பட்டவைகளைத் தவிர - அவற்றில் எதையும் வெளிக்காட்ட முடியாது என்றும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அவ்வாறு வெளிப்படுபவைகளை உடனே மறைத்து விட்டால் அவர்கள் மீது எந்தக் குற்றமும் கிடையாது.

இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் தமது அல்குர்அன் விளக்கவுரையில் இவ்வாறு கூறுகின்றார்கள், “மறைக்க முடியாதவற்றைத் தவிர அந்நியவர் முன்னிலையில் எந்த அலங்காரத்தையும் வெளிக்காட்ட வேண்டாம். இப்னு மஸ்ஃஊத் (ரலி) அவர்கள் “மேலாடைகள், முழுமையான ஆடைகள் போன்றவை” என்கிறார்கள். அதாவது அரபிப் பெண்கள் தலைகளை மறைக்கும் விதமாக அணியும் ஆடை நாடப்படுகின்றது. ஆடைகளுக்கு கீழால் வெளிப்படுபவற்றில் குற்றம் கிடையாது. ஏனெனில் அதனை மறைக்கமுடியாது.

2. அதுவே அலங்காரமாக இல்லாமல் இருத்தல் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான், “தங்கள் அலங்காரங்களை அவர்கள் வெளிக்காட்டவேண்டாம்” எனவே, அது பொதுவாக ஆண்களின் பார்வையை ஈர்க்குமளவு வெளிப்படையாக அலங்கரிக்கப்பட்டுள்ள ஆடைகளையும் உள்ளடக்கும். அதற்குப் பின்வரும் வசனமும் ஆதாரமாக உள்ளது இன்னும், “(நபியுடைய மனைவியரே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். முந்தைய அறியாமைக் காலத்தில் (பெண்கள் மறைக்க வேண்டியதை மறைக்காது) வெளிப்படுத்தியதைப் போன்று வெளிப்படுத்தித் திரியாதீர்கள்,” (ஸூரா அஹ்ஸாப் : 33) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் “மூன்று பேரைப் பற்றிக் கேட்காதீர்கள் 1. மக்கள் கூட்டத்தை விட்டுப் பிரிந்து சென்று, தலைவருக்கு மாறுசெய்து, அவ்வாறே மரணித்தவர். 2. தன் எஜமானை விட்டு ஓடி ஒழிந்து அவ்வாறே மரணித்த அடிமைப் பெண் அல்லது ஆண். 3. ஒரு கணவன் உலகச் செலவுக்கு தேவையானவற்றை கொடுத்துவிட்டு மறைந்து சென்ற பின்னரும், வீட்டை விட்டு அலங்காரங்களுடன் வெளியேறும் பெண். அறிவிப்பவர்: புழாலா பின்த் உபைத், ஆதாரம் : ஹாகிம், அஹ்மத்)

3. மெல்லியதாக அல்லாமல் கனத்ததாக இருத்தல். ஏனெனில் மறைவு என்பது அதன் மூலமாகவே ஏற்படுகின்றது. மெல்லிய ஆடைகளைப் பொறுத்தவரை அது பெண்ணின் அலங்காரத்தையும் கவர்ச்சியையும் அதிகரிக்கவே செய்யும். இதைப்பற்றித்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறினார்கள் “எனது உம்மத்தின் கடைசிக் காலகட்டத்தில் சில ஆடை அணிந்தும் அணியாத பெண்கள் இருப்பார்கள். அவர்கள் தலைகள் ஒட்டகத் திமில்களைப் போன்றிருக்கும். அவர்களை சபித்துவிடுங்கள். அவர்கள் சாபத்துக்குரியவர்கள்.” இன்னுமொரு அறிவிப்பில் இவ்வாறு உள்ளது “சுவர்க்கம் நுழையமாட்டார்கள். அதன் நறுமணத்தையாவது நுகரமாட்டார்கள். அதன் நறுமணம் இன்ன தொலைவில் இருக்கும் (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்)

இப்னு அப்தில் பர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள், “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இங்கு நாடியது, உடலை முழுமையாக மறைக்காமல் அங்க அவயங்களைக் காட்டும் மெல்லிய ஆடைகளை அணியும் பெண்களைத்தான் அவர்கள் பேரளவில் ஆடை அணிந்தவர்களாக இருந்தாலும் உண்மையில் ஆடையற்றவர்கள் (இமாம் ஸ{யூதியின் தன்வீருல் ஹவாலிக் எனும் நூலைப் பார்க்கவும்)

4. உடலின் பருமனைக் காட்டுமளவு இறுக்கமானதாக இல்லாமல், அகன்றதாக இருத்தல்.

ஆடையின் நோக்கம் கவர்ச்சியை தவிர்ப்பது. எனவே, அகன்ற ஆடைகள் மூலமே அது சாத்தியமாகும். இறுக்கமான ஆடைகள் தோளின் நிறத்தை மறைத்தாலும் பெண்ணின் உடல் பருமனை முழுமையாகவோ அல்லது சில பகுதிகளையோ தெளிவாகக் காட்டும். ஆண்களின் பார்வையில் அந்தத் தோற்றம் காண்பிக்கப்படும். எனவே, அதில் உள்ள சீர்கேடு மிகத் தெளிவானது. அதனால் ஆடை விசாலமாக இருக்க வேண்டும். உஸாமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்,  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் நபித்தோழர் அன்பளிப்பாக வழங்கிய கனத்த கிப்திய ஆடை ஒன்றை அறிவித்தார்கள். நான் அதனை என் மனைவிக்கு அணிவித்தேன். அவர்கள் என்னிடம், “அந்த கிப்திய ஆடையை ஏன் அணியாமல் இருக்கின்றீர்கள்? என கேட்க, நான், “அதனை என் மனைவிக்கு அணிவித்தேன்” என்று பதில் அளித்தேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அதற்கு கீழே இன்னுமொரு அடையை வைத்துக் கொள்ளுமாறு அவருக்கு ஏவுங்கள். அவ்வாடை அவளது எலும்புகளின் பருமனை அடையாளப்படுத்தி காட்டும் என நாம் பயப்படுகிறேன்” என்று கூறினார்கள். (அஹ்மத், பைஹகீ)

4. நறுமணம் பூசப்படாததாக இருத்தல்.

பெண்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் போது நறுமணம் பூசுவதை; தடுக்கும் பல ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் ஆதாரப்பூர்வமானவற்றை இங்கு தருகின்றோம்

1) அபூ மூஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள், “எந்த பெண்ணாவது நறுமணம் பூசிக்கொண்டு மக்களுக்கு மத்தியில், அவர்கள் அதனை நுகரும் நோக்கில் நடந்து சென்றால் அவள் விபச்சாரி ஆகும்.”

2) ஸைனப் அஸ்ஸகபிய்யா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள், “உங்களில் யாராவது பள்ளிவாசலுக்குப் புறப்பட்டு வர நாடினால் நறுமணத்தை நெருங்கவேண்டாம்.

3) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். “எந்தப் பெண்ணாவது நறுமணம் (பகூர்) பூசிக் கொண்டால் எம்முடன் இஷாத் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டாம்”

4) மூஸா பின் யஸார் என்பவர் அறிவிக்கின்றார்கள், ஒரு நறுமணம் வீசியவளாக

அபூ ஹுரைரா (ரலி) அவர்களைக் கடந்து சென்றார்கள். அவர்கள் அவளிடம், “அல்லாஹ்வின் அடிமையே! பள்ளிவாசலுக்கா செல்கின்றீர்? எனக் கேட்க, “ஆம் என்றாள் அவள். மீண்டும் “அதற்காகவா மணம் பூசினீர்கள்?” எனக் கேட்க அதற்கும் “ஆம்” என்றாள். அப்போது அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், “திரும்பிச் சென்று குளித்துவிட்டு வாருங்கள். “எந்தப்பெண்ணாவது நறுமணம் பூசிய நிலையில் பள்ளிக்குச் சென்றால், அவள் வீடுதிரும்பி குளிக்கும் வரை அவளது எந்தத் தொழுகையையும் அல்லாஹ் ஒப்புக்கொள்ளமாட்டான்.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்.” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ்கள் பொதுவாக உள்ளதால் நாம் மேற்கூரிய கருத்துக்கு ஆதாரமாக எடுக்கலாம். “மனம் பூசுதல்” என்பது உடலுக்குப் பாவிக்கப்படுவது போன்று ஆடையிலும் பாவிக்கப்படும். குறிப்பாக, மூன்றாவது ஹதீஸில் “பகூர்” என்ற வாசனைத் திரவியம் குறிக்கப்பட்டுள்ளது. இது ஆடைகளிலேயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

இது தடைசெய்யப்பட்டமைக்கான காரணம் தெளிவானது. ஏனெனில் அது இச்சையைத் தூண்டும் காரணியாக உள்ளது. இதுபோலவே, அழகான ஆடைகள், வெளிப்படையான ஆபரணங்கள், ஆடம்பரமான அலங்காரங்கள், ஆண்களோடு இரண்டரக் கலந்து செல்லல் போன்றவற்றையும் உலமாக்கள் குறிப்பிட்டுள்ளார்கள்,

இப்னு தகீக் அல்ஈத் (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் “பள்ளிவாசலுக்கு செல்ல விரும்பும் பெண் நறுமணம் பூசுவதை இந்த நபிமொழி தடைசெய்கின்றது. ஏனெனில், அது ஆண்களின் இச்சையைத் தூண்டுகின்றது. (இமாம் முனாவியின் “பைழுல் கதீர்” எனும் நுலைப் பார்க்கவும்)

6. ஆண்களின் ஆடைக்கு ஒப்பாகாமல் இருத்தல்.

ஆடை போன்றவற்றில் ஆணுக்கு ஒப்பாகும் பெண்ணைச் சபித்து பல ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் வந்துள்ளன. நாம் அறிந்த சிலவற்றை இங்கு தருகின்றோம்.

1) அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் “பெண்ணைப் போன்று ஆடை அணியும் ஆணையும், ஆணைப் போன்று ஆடை அணியும் பெண்ணையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள்

2) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதைத் தான் கேட்டதாக அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் “ஆண்களுக்கு ஒப்பாகும் பெண்களும், பெண்களுக்கு ஒப்பாகும் ஆண்களும் என்னைச் சார்ந்தவர்கள் அல்ல.

3) இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள், “பெண்கள் போன்று மாறும் ஆண்களையும், ஆண்கள் போன்று மாறும் பெண்களையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள்” மேலும் “உங்கள் இடங்களில் இருந்து அவர்களை வெளியேற்றுங்கள்” என்றும் கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவரை வெளியேற்றியிருந்தார்கள். உமர் (ரலி) அவர்களும் ஒருவனை வெளியேற்றினார்கள். இன்னொரு அறிவிப்பில் இவ்வாறு உள்ளது “பெண்களுக்கு ஒப்பாகும் ஆண்களையும், ஆண்களுக்கு ஒப்பாகும் பெண்களையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள்.

4) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் “மூவர் சுவனம் நுழையமாட்டார்கள். அல்லாஹ் மறுமையில் அவர்களைப் பார்க்கவும் மாட்டான் : பெற்றோருக்கு நோவினை செய்தவன், ஆண்களுக்கு ஒப்பாக, அவர்களைப் போன்று மாறியுள்ள பெண், தன் மனைவி பாவத்தில் ஈடுபடுவதைக் கண்டுகொள்ளாமல் இருப்பவன்.”

இப்னு அபீ முலைகா அவர்கள் கூறுகின்றார்கள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் “ஒரு பெண் செருப்பு அணியலாமா?” என வினவப்பட்ட போது, “ஆண்களுக்கு ஒப்பாகும் பெண்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்துள்ளார்கள்” என்று பதில் அளித்தார்கள்.

மேற்கூறிய நபி மொழிகள் ஆண்கள் பெண்களுக்கு ஒப்பாவதோ, பெண்கள் ஆண்களுக்கு ஒப்பாவதோ ஹராம் என்பதை மிகத் தெளிவாக அறிவிக்கின்றன. இது பொதுவாக ஆடை மாத்திரமல்லாது அனைத்தையும் உள்ளடக்கும். ஆனால் முதல் ஹதீஸில் மாத்திரம் ஆடையைக் குறித்து, குறிப்பாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

7) காபிரான பெண்களின் ஆடைகளுக்கு ஒப்பாகாமல் இருத்தல்.

முஸ்லிம் ஆண்களோ பெண்களோ காபீர்களுக்கு அவர்களது வணக்கங்களிளோ, கொண்டாட்டங்களிலோ, அவர்களுக்கு மாத்திரமான ஆடைகளிலோ ஒப்பாகுவது கூடாது என்பது இஸ்லாத்தின் மிக உறுதியான, முக்கியமான அடிப்படையாகும்.

ஆனாலும் கவலைக்குரிய விடயம் நிறைய முஸ்லிம்கள் - மார்க்கத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் கூட - இதனை மீறுகின்றார்கள். அவர்களது மார்க்கத்தைப் பற்றி அறியாமை, அல்லது மனோ இச்சையை பின்பற்றல், சமகால வழமைகளுடன் இணங்கிச் செல்லல், நிராகரிப்பாளர்களான ஐரோப்பியர்களுடனும் அவர்களுடைய சம்பிரதாயங்களுடன் இணங்கிப் போதல் போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால்,  இதுவே முஸ்லிம்கள் பலவீனப்பட்டு பின்வாங்கவும், அந்நியர்கள் அவர்களை ஆக்கிரமிக்கவும் காரணமாக அமைந்து விட்டது. “எந்த ஒரு சமுதாயத்தினரும் தம் நிலையைத் தாமே மாற்றிக்கொள்ளாதவரை அல்லாஹ் நிச்சயமாக அவர்களை மாற்றுவதில்லை.” (அல்குர்ஆன்)

இந்த முக்கிய அடிப்படையை சரிகாணும் ஆதாரங்கள் அல்குர்ஆன், சுன்னாவில் நிறையவே உள்ளன என்பதை நாம் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். அல்குர்ஆனின் ஆதாரங்கள் பொதுவாக இருந்தாலும், சுன்னா - வழமை போன்று - அவற்றைத் தெளிவுபடுத்துகின்றது.

8. பிரபல்யத்தைத் தரும் ஆடையாக இல்லாமல் இருத்தல்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் “யார் இவ்வுலகில் பிரபல்யத்தைத் தரும் ஆடையை அணிகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் மறுமையில் இழிவின் ஆடையை அணியச் செய்து, அதில் நெருப்பை எறியச் செய்துவிடுவான்.

(நூல் : முஸ்லிம் பெண்ணின் ஹிஜாப் : 54 – 67)

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

மூலநூட்கள்

மூலம்

அஷ்ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ் அல்முனஜ்ஜித்

எழுத்து வடிவமைப்பு விருப்பங்கள்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android