"ஒருவரது பிறந்தநாளைக் கொண்டாடுவது என்பது, சிலசமயம் பெரும்பாலானவர்கள் செய்வது போன்று ஒரு உலக வழக்கமாகச் செய்யப்படலாம்; சிலநேரம், மீலாதுன் நபி (நபியவர்களின் பிறந்தநாள்) கொண்டாட்டம் மற்றும் சில நல்லடியார்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்களைப் போல, ஒரு மார்க்க வழிபாடாக செய்யப்படலாம்.”
- அவ்வாறு ஒரு உலக வழக்கம் என்ற அடிப்படையில் செய்தால்; அது அந்நியர்களிடமிருந்து முஸ்லிம்களிடத்தில் பொருத்தப்பட்ட ஒரு உலக வழக்கமாகத்தான் இருக்கிறது; எனவே அதனை கொண்டாடுவது அந்நியர்களுக்கு ஒப்பாகுதல் என்ற மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட வெறுக்கப்பட்ட அம்சமாகவே கருதப்படும். ஏனெனில் நபியவர்கள் கூறியிருக்கிறார்கள் [யாரொருவர் ஒரு சமூகத்துக்கு ஒப்பாகிறாரோ அவர் அந்த சமூகத்தைச் சார்ந்தவராகவே கணிக்கப்படுவார்] (நூல்: அபூதாவூத்:4031, ஸஹீஹு ஸுனனு அபூதாவூத் எனும் நூலில் இமாம் அல்பானி அவர்கள் இந்த ஹதீஸ் ஸஹீஹானது என கூறியிருக்கிறார்கள் )
"அந்நியவர்களின் தோற்றம், ஆடை, முகமன் கூறுதல் போன்ற பல உலக வழக்கங்களிலேயே அவர்களுக்கு ஒப்பாவதை விட்டும் நம்மைத் தடுப்பதில் இஸ்லாமிய மார்க்கம் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது.
இஸ்லாமியர்களான எங்களைப் பொறுத்தவரை வருட ஒவ்வொரு வருடமும் திரும்பத் திரும்ப வழமையாக வரக்கூடிய கொண்டாட்டங்களைப் பொருத்தமட்டில் -பெருநாள் என்றால் அது தான்- நோன்புப் பெருநாள் அஞ்சு பெருநாள் என்ற இரு பெருநாட்களைத் தவிர வேறொன்றுமில்லை. அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள் 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதினாவிற்கு வந்த போது, அங்குள்ள மக்கள் விளையாடி மகிழ்வதற்கென இரண்டு நாட்கள் (பெருநாட்கள்) இருந்தன. அப்போது நபியவர்கள், "இந்த இரண்டு நாட்களின் பின்னணி என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "நாங்கள் அறியாமைக் காலத்தில் (ஜாஹிலிய்யா) இந்த இரண்டு நாட்களிலும் விளையாடி மகிழக்கூடியவர்களாக இருந்தோம்" என்றனர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், "நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு இவ்விரண்டு நாட்களுக்குப் பதிலாக இவற்றை விட மிகச் சிறந்த வேறு இரண்டு நாட்களை மாற்றாக வழங்கியுள்ளான்; அவைதான் ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் நோன்புப் பெருநாள் ஆகும்" என்று கூறினார்கள்' (நூல்: ஸுனனு அபு தாவூத்(1134), ஸுனனுந்நஸாஈ(1556) இமாம் அல்பானி அவர்களால் அஸ்ஸில்ஸிலதுஸ்ஸஹீஹா எனும் நூலில் ஆதாரபூர்வமானது எனச் சான்றளிக்கப்பட்டுள்ளது(ப.2021)).
"எனவே, நபியவர்களின் இந்த வழிகாட்டுதலில் புதிய பெருநாட்களை உருவாக்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அல்லாஹ் இந்த இஸ்லாமிய சமுதாயத்திற்காக ஏற்படுத்தித் தந்துள்ள கண்ணியமிக்க இந்த இரண்டு பெருநாட்களோடு மட்டுமே சுருக்கிக் கொள்ள வேண்டும் என்பதும் தெளிவாகிறது.”
- கொண்டாட்டங்கள் அல்லது விழாக்கள் வழிபாட்டு நோக்கத்தில் செய்யப்படுமானால்; பெரும்பாலும் யாரும் தங்களது பிறந்தநாட்களை அவ்வாறு வழிபாட்டு நோக்கில் கொண்டாடுவதில்லை, மாறாக நபியவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம், அல்லது நல்லடியார்கள் ,இறைநேசர்களுக்காக செய்யப்படும் பிறந்தநாள் கொண்டாட்டங்களே இவ்வாறு வழிபாட்டு நோக்கில் செய்யப்படுகின்றன. அவை அனைத்துமே மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட அனுஷ்டானங்களாகும். ஏனெனில் நம்பியவர்கள் கூறியிருக்கிறார்கள்: [யார் உங்களுடைய விடயத்திலே (மார்க்கத்திலே) அதிலே இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குகிறாரோ அது நிராகரிக்கப்பட்டதாகும்]. (நூட்கள்: ஸஹீஹுல் புகாரி:2697, ஸஹீஹுல் முஸ்லிம்: 1718), இன்னொரு ஹதீஸில் [யார் எங்களுடைய மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை செய்கிறாரோ, அதை நிராகரிக்கப்பட்டதாகும்] (ஸஹீஹுல் முஸ்லிம்:1718).
ஃபதாவா அல்லஜ்னா அத்தாஇமா(3/88) வில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
முதலாவது: ஆண்டுதோறும் அல்லது மாதந்தோறும் அல்லது வாரந்தோறும்... இது போன்று குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒன்று சேரும் நிகழ்வுக்கு தான் பெருநாள் என்று சொல்லப்படும். நோன்பு பெருநாள் ஜுமுஅதினம் ஒன்று திரும்பத் திரும்ப வரக்கூடிய ஒரு நாள், இந்த நாளிலே மக்கள் ஒன்று கூடுதல், அந்த நாளில் வழிபாடாகவும் வழமையான உலக வழக்கங்களாகவும் மனிதர்கள் செய்யக்கூடிய பல செயல்கள் என இன்னோரன்ன பல விடயங்களை பெருநாள் என்பது உள்ளடக்கியிருக்கிறது.
இரண்டாவது: "இத்தகைய கொண்டாட்டங்களில் நன்வையை நாடி அல்லாவை நெருங்கும் வழிபாடாகவோ நபியவர்களை கண்ணியப்படுத்தும் நோக்கிலோ செய்யப்படுபவையும்; அறியாமைக் கால மக்களின் பழக்கவழக்கங்களுக்கோ, அல்லது அவர்களைப் போன்ற ஏனைய இறை நிராகரிப்பாளர்களின் செயல்களுக்கு ஒப்பாக்க்கூடிய செயல்களும், மார்க்கத்தில் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட, முற்றிலும் தடுக்கப்பட்ட புதுமைகளாகும். இவை அனைத்தும் நபியவர்களின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பொதுவான பின்வரும் பொன்மொழிக்குள் அடங்குகின்றன: [யார் உங்களுடைய விடயத்திலே (மார்க்கத்திலே) அதிலே இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குகிறாரோ அது நிராகரிக்கப்பட்டதாகும்]. (நூட்கள்: ஸஹீஹுல் புகாரி:2697, ஸஹீஹுல் முஸ்லிம்: 1718).
மார்க்கத் தீர்ப்புகள் மற்றும் மார்க்க கரீதியான ஆய்வுக் கட்டுரைகளுக்கான நிரந்தரக் குழு.
ஷேஃக் அப்துல் அஜீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் மற்றும் ஷைக் அப்துர் ரஸ்ஸாக் அஃபீஃபி
ஷேஃக் இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் பிறந்தநாள் கொண்டாட்டங்களின் மார்க்கச் சட்டம் குறித்துக் கேட்கப்பட்டது.
அதற்கு அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்: 'இந்தக் கேள்வியிலிருந்து தெளிவாக விளங்குவது என்னவென்றால், இங்கு பிறந்தநாள் கொண்டாட்டம் எனக் குறிப்பிடப்படுவது ஒரு தனி மனிதனின் பிறந்தநாளைப் பற்றியதாகும். அதாவது, அவரது பிறந்த தேதியிலிருந்து ஒவ்வொரு வருடம் முடியும் போதும், அவருக்காக ஒரு புதிய விழாவை ஏற்பாடு செய்து, அதில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரு பெரிய அல்லது சிறிய விருந்திற்காக ஒன்று கூடுவார்கள்.
இதைக் குறித்து எனது கருத்து என்னவென்றால், இது முற்றிலும் தடுக்கப்பட்ட ஒரு காரியமாகும். ஏனெனில், இஸ்லாமிய மார்க்கத்தில் ஹஜ் பெருநாள், ரமலான் மாதத்திற்குப் பின்வரும் நோன்புப் பெருநாள் மற்றும் வாராந்தப் பெருநாளான வெள்ளிக்கிழமை ஆகியவற்றைத் தவிர, வேறு எந்தவொரு நிகழ்விற்காகவும் எந்தவொரு பெருநாளும் காட்டித் தரப்படவில்லை. அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள் [அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதினாவிற்கு வந்த போது, அங்குள்ள மக்கள் விளையாடி மகிழ்வதற்கென இரண்டு நாட்கள் (பெருநாட்கள்) இருந்தன. அப்போது நபியவர்கள், "இந்த இரண்டு நாட்களின் பின்னணி என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "நாங்கள் அறியாமைக் காலத்தில் (ஜாஹிலிய்யா) இந்த இரண்டு நாட்களிலும் விளையாடி மகிழக்கூடியவர்களாக இருந்தோம்" என்றனர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், "நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு இவ்விரண்டு நாட்களுக்குப் பதிலாக இவற்றை விட மிகச் சிறந்த வேறு இரண்டு நாட்களை மாற்றாக வழங்கியுள்ளான்; அவைதான் ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் நோன்புப் பெருநாள் ஆகும்] என்று கூறினார்கள்' (நூல்: ஸுனனு அபு தாவூத்(1134), ஸுனனுந்நஸாஈ(1556).
மூலம்: ஷேஃக் இப்னு உஸைமீன் அவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் மார்க்கத் தீர்ப்புகளின் தொகுப்பு, பாகம் 16, பக்கம் 198.
எனவே, ஒரு மனிதனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதும், அதனை ஒவ்வொரு வருடமும் வழக்கமாக்கிக் கொள்வதும் அதனை ஒரு பெருநாளாக மாற்றிவிடுகிறது. எனவே இச்செயல் ஒன்றில் மாற்று மதத்தினருக்கு ஒப்பாக நடப்பதாக இருக்கும், அல்லது மார்க்கத்தில் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட ஒரு புதுமையாக (பித்அத்) இருக்க வேண்டும்.
ஒருவேளை இக்கொண்டாட்டம் மார்க்க வழிபாட்டு (இபாதத்) நோக்கில் செய்யப்படவில்லை என்றால், அது பித்அத் என்ற வரம்பை விட்டு வெளியேறிவிடுகிறது. இருப்பினும், அதற்காக இது அனுமதிக்கப்பட்ட ஒன்று என்று அர்த்தமாகாது; ஏனெனில், மாற்று மதத்தினருக்கு ஒப்பாக நடப்பது என்ற மற்றுமொரு ஆபத்து இதில் இன்னும் எஞ்சியே இருக்கிறது.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.