முதலாவதாக:அல்லாஹ்வின்பெயர்கள் மற்றும் அவனது பண்புகளைக் கொண்டும், அதேபோல ஈமான் கொள்ளுதல் மற்றும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது அன்பு வைத்தல் போன்ற நற்செயல்களைக் கொண்டும், ஒரு நல்லடியாரின் பிரார்த்தனையைக் கொண்டும் அவற்றைப் பொருட்டாகக் கொண்டு அல்லாஹ்விடம் வேண்டுவது மார்க்கத்தில் விதியாக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று வகையான வேண்டுதல்களும் அறிஞர்கள் மத்தியில் ஏகோபித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட வகைகளாகும்.
(மேலதிக விபரங்களுக்கு கேள்வி எண்கள்: 979 மற்றும் 3297 ஆகியவற்றைப் பார்க்கவும்).
ஆனால், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைக் கொண்டோ அல்லது அவர்களின் அந்தஸ்தைக் கொண்டோ வேண்டுதல் செய்வதைப் பொறுத்தவரை; அதாவது பிரார்த்தனை செய்பவர்: யாஅல்லாஹ்! உனது நபியின் அந்தஸ்தைப் பொருட்டாகக் கொண்டு உன்னிடம் நான் கேட்கிறேன்" என்று கூறுவது மார்க்க அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாட்டிற்குரிய ஒரு விவகாரமாகும். மேலும், இதனை ஆதரிப்பதற்கான திட்டவட்டமான சான்றுகள் எதுவும் வரவில்லை. இஸ்லாமிய வணக்கவழிபாடுகளைப் பொறுத்தவரை, அவை முற்றிலும் மார்க்க ஆதாரங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை ஆகும்; எனவே, எந்தவொரு விஷயத்திற்கு மார்க்க ஆதாரம் நிரூபிக்கப்பட்டுள்ளதோ அதைத் தவிர வேறு எதனையும் வணக்கமாகச் செயல்படுத்துவது மார்க்க ரீதியாக அனுமதிக்கப்பட மாட்டாது.
மார்க்க அறிஞர்கள் பலர் (அல்லாஹ்வைத் தவிர வேறு எவருடையதேனும்) உரிமை அல்லது அந்தஸ்தைப் பொருட்டாகக் கொண்டு வேண்டுதல் செய்வதைத் திட்டவட்டமாகத் தடை செய்துள்ளனர்.
இமாம் அல்-ஹஸ்கஃபி அவர்கள் தங்களின் "அல்-துர்ருல் முக்தார்" நூலில் குறிப்பிட்டுள்ளதாவது:
“இமாம் அபூ ஹனீஃபா அவர்கள் கூறியதாக, 'அல்-முன்தகா' என்ற நூலை மேற்கோள் காட்டி, அபூயூசுஃப் வழியாக 'அல்-தாதர்கானிய்யா' நூலில் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது: “அல்லாஹ்வைத் தவிர வேறு எதனையும் பொருட்டாகக் கொண்டு அவனிடம் எவரும் பிரார்த்தனை செய்யக் கூடாது. மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதும் கட்டளையிடப்பட்டதுமான பிரார்த்தனை முறை என்பது, அல்லாஹுதஆலாவின் பின்வரும் வசனத்திலிருந்து பெறப்பட்டதாகும்: "அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் உள்ளன; எனவே அவற்றைக் கொண்டே அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்!” (முற்றிற்று). (அல்-துர்ருல் முக்தார் - பாகம்: 5, பக்கம்: 715).
இமாம் அல்-காஸானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தங்களின் "பதாயிஉஸ் ஸனாயிஃ" நூலில் குறிப்பிட்டுள்ளதாவது:
“ஒரு மனிதன் தனது பிரார்த்தனையில்: 'உனது நபிமார்கள் மற்றும் தூதர்களின் உரிமையைக் கொண்டும், இன்னாரது உரிமையைக் கொண்டும் உன்னிடம் நான் கேட்கிறேன்' என்று கூறுவது மார்க்கத்தில் வெறுக்கத்தக்க செயலாகும். ஏனெனில், தூய்மையானவனும் உன்னதமானவனுமாகிய அல்லாஹுதஆலாவின் மீது எவ்வித உரிமையையும் கோரப் படைப்பினங்களில் எவருக்கும் எவ்வித தகுதியும் இல்லை." (முற்றிற்று.) (பதாயிஉஸ் ஸனாயிஃ - பாகம்: 5, பக்கம்: 126).
இதேபோன்ற மார்க்கத் தீர்ப்பு இமாம் அஸ்-ஸைலயீ அவர்களின் "தப்யீனுல் ஹகாயிக் ஷரஹ் கன்ஸித் தகாயிக்"(6:31) நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இக்கூற்றானது (ஹனபி மத்ஹபின்) மூன்று பிரதான இமாம்களான இமாம் அபூ ஹனீஃபா, மற்றும் அவரது இரு மாணவர்களான இமாம் அபூயூசுஃப் மற்றும் இமாம் முஹம்மத் பின் அல்-ஹஸன் ஆகிய மூவரின் கொள்கை என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், அல்-பாபர்தீயின் "அல்-இனாயா ஷரஹ் அல்-ஹிதாயா"(10:64), இப்னுல் ஹமாமின் “ஃபத்ஹுல் கதீர்”(10:64), மற்றும் "துரருல் ஹுக்காம்"(1:321), "மஜ்மஉல்-அன்ஹுர் ஷரஹ் முல்தகல் அப்ஹுர்"(2554) ஆகிய இதர ஹனபி மத்ஹபின் மூல நூல்களிலும் இவ்வாறே பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹனபி மத்ஹபைச் சார்ந்த பேரறிஞர் செய்யித் நுஃமான் கைருத்தீன் அல்-ஆலூஸி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தங்களின் "ஜலாவுல் ஐனைன்"(516) நூலில் குறிப்பிட்டுள்ளதாவது:
"அவர்களது (ஹனபி மத்ஹபின்) அனைத்து மூல நூட்களிலும் ஒருமித்த கருத்தாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாவது: பிரார்த்தனை செய்யக்கூடிய ஒரு மனிதன் ஏதாவது ஒன்றை பொருட்டாக வைத்து பிரார்த்தனை செய்யும்போது, நபிமார்கள் மற்றும் இறைநேசர்களின் உரிமையைக் கொண்டும், அல்லாஹ்வின் வீடான மஸ்ஜிதுல்ஹராம் மற்றும் மஷ்அருல் ஹராமின் உரிமையைக் கொண்டும் வேண்டுகிறேன்' என்று கூறுவது ஹராத்திற்கு மிக நெருக்கமான, தடுக்கப்பட்ட வெறுக்கத்தக்கச் செயலாகும். இத்தகைய செயல் இமாம் அபூஹனீபாவின் மாணவனான இமாம் முஹம்மத் அவர்களிடம், எந்தளவுக்கு தடைசெய்யப்பட்டதெனில், நெருப்பால் ஒருவரை வேதனை செய்வதைப் போன்றதாகும். இதற்கான காரணமாக அவர்கள் குறிப்பிடுவது: 'ஏனெனில் படைக்கப்பட்ட ஒரு பொருளுக்குப் படைத்த இறைவனின் மீது எவ்வித உரிமையும் கிடையாது' என்பதாகும்." (முற்றிற்று.) (ஜலாவுல் ஐனைன் - பக்கம்: 516).
இரண்டாவதாக:
நபியவர்களைக் கொண்டு வேண்டுதல் செய்வது அனுமதிக்கப்பட்டது என்று இமாம் அஹ்மத் அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ள ஒரு மார்க்கக் கூற்றை, அவர்கள் நபியவர்களின் பெயரால் சத்தியம் செய்வதன் அனுமதியோடு ஒப்பிட்டு சொல்லியுள்ளார்கள்; இதுவும் இமாம் அஹ்மத் அவர்களிடமிருந்து வந்துள்ள ஒரு கூற்றேயாகும். ஆனால், அவர்களிடமிருந்து வந்துள்ள மற்றொரு கூற்றானது நபியவர்களின் பெயரால் சத்தியம் செய்வது ஹராம் என்பதாகும்; இதுவே பெரும்பான்மையான சட்ட வல்லுநர்களின் கருத்தோடு ஒத்துப்போகக்கூடியதாக உள்ளது.
இமாம் இப்னு முஃப்லிஹ் (ரஹிமஹுல்லாஹ்) தங்களின் "அல்-ஃபுரூஃ" நூலில் குறிப்பிட்டுள்ளதாவது:
"ஒரு நல்லடியாரின் பொருட்டால் பிரார்த்தனை செய்வது அனுமதிக்கப்பட்டதாகும்; அது விரும்பத்தக்கது என்றும் கூறப்பட்டுள்ளது. இமாம் அஹ்மத் அவர்கள் அல்-மர்வதீக்காக எழுதிய தங்களின் ஹஜ் வழிகாட்டி நூலில்: 'நிச்சயமாக ஒருவர் தனது பிரார்த்தனையில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பொருட்டால் பிரார்த்தனை செய்யலாம்' எனக் குறிப்பிட்டுள்ளார்கள்; மேலும் 'அல்-முஸ்தவ்அப்' மற்றும் இதர நூட்களிலும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நமது ஆசான் (இப்னு தைமிய்யா) இப் பிரச்சினையை நபியவர்களின் பெயரால் சத்தியம் செய்யும் விவகாரத்தைப் போன்றதாகவே ஆக்கியுள்ளார்கள்." (முற்றிற்று). (அல்-ஃபுரூஃ - பாகம்: 3, பக்கம்: 229).
அதாவது, இமாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள், ஒருவரின் பொருட்டால் வேண்டுவதை, நபியவர்களின் பெயரால் சத்தியம் செய்வதன் அனுமதியோடு ஒப்பிடத்தக்க ஒரு விதியாகவே நோக்கியுள்ளார்கள்.
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் பின்வரும் கேள்வி கேட்கப்பட்டது: " நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பொருட்டால் வேண்டுதல் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா இல்லையா?"
அதற்கு அவர்கள் அளித்த பதில்:
"முதன்மையாக, நபியவர்களின் மீது கொண்ட ஈமான், அவர்கள் மீதான அன்பு, அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடத்தல், அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்லுதல் மற்றும் அவர்களது பிரார்த்தனை, அவர்களது சிபாரிசு போன்ற அவர்களின் செயற்பாடுகளின் பொருட்டாலும், அவர்கள் விடயத்தில் அடியார்கள் மீது கட்டளையிடப்பட்டுள்ள நற்செயல்களின் பொருட்டாலும் அல்லாஹ்விடம் வேண்டுதல் மார்க்கத்தில் விதியாக்கப்பட்டுள்ளது என்பது தான் முஸ்லிம்களின் ஏகோபித்த முடிவாகும்.
மேலும், நபித்தோழர்கள் (ரலியல்லாஹு அன்ஹும்) நபியவர்கள் உயிரோடு வாழ்ந்த காலத்தில் அவர்களின் பொருட்டால் வேண்டுதல் செய்து வந்தனர்.
ஆனால், நபியவர்களின் மரணத்திற்குப் பிறகு, அவர்கள் தங்களின் தந்தையின் சகோதரரான அப்பாஸ் (ரலி) அவர்களின் பிரார்த்தனையின் பொருட்டால் வேண்டுதல் செய்தார்கள்; அவர்கள் நபியவர்கள் உயிரோடு இருந்தபோது எவ்வாறு தவஸ்ஸுல் செய்தார்களோ அவ்வாறே இதையும் அமைத்துக் கொண்டனர்.
இதல்லாமல், பிரார்த்தனை செய்யக்கூடிய ஒரு மனிதன்: 'யா அல்லாஹ்! உனது நபியின் பொருட்டால் உன்னிடம் நான் வேண்டுகிறேன்' என்று கூறுவதைப் பொறுத்தவரை, அதில் மார்க்க அறிஞர்களிடம் இரண்டு கருத்துக்கள் உள்ளன; அது அவர்கள் நபியவர்களின் பெயரால் சத்தியம் செய்வதில் கொண்டுள்ள இரண்டு கருத்துக்களைப் போன்றதேயாகும்.
இமாம்களுள் பெரும்பான்மையினரான இமாம் மாலிக், இமாம் ஷாஃபிஈ மற்றும் இமாம் அபூ ஹனீஃபா ஆகிய மூவருடைய கொள்கையாவது: நபியவர்களைத் தவிர ஏனைய நபிமார்கள் அல்லது வானவர்களுடைய பெயரால் சத்தியம் செய்வது மார்க்கத்தில் ஆகுமாகாது; மேலும் அறிஞர்களின் ஏகோபித்த முடிவின்படி செல்லுபடியாகாது. இதுவே இமாம் அஹ்மத் அவர்களிடமிருந்து வந்துள்ள இரண்டு கூற்றுகளுள் ஒரு கூற்றாகும்.
அவர்களிடமிருந்து வந்துள்ள மற்றொரு கூற்றாவது: ஏனைய படைப்புகளைத் தவிர்த்து, நபியவர்களின் பெயரால் மட்டும் சத்தியம் செய்வது பிரத்தியேகமாகச் செல்லுபடியாகும் என்பதாகும்; இதன் காரணமாகவே இமாம் அஹ்மத் அவர்கள் தங்களது தோழரான அல்-மர்வதீக்காக எழுதிய தங்களின் ஹஜ் வழிகாட்டி நூலில்: 'பிரார்த்தனையில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பொருட்டால் பிரார்த்தனை செய்யலாம்' எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
எனினும், இமாம் அஹ்மதைத் தவிர்த்த ஏனைய இமாம்கள் கூறியிருப்பதாவது: 'இத்தகைய செயல் நபியவர்களின் பெயரால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வதை போன்றதாகும்; படைக்கப்பட்ட எதனைக் கொண்டும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வது கூடாது.'
இமாம் அஹ்மத் அவர்கள், தங்களின் இரு கூற்றுகளுள் ஒன்றில் நபியவர்களின் பெயரால் சத்தியம் செய்வதை அனுமதித்த காரணத்தினாலேயே, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டால் பிரார்த்தனை செய்வதையும் அனுமதித்தார்கள்.
ஆனால், அவர்களிடமிருந்து வந்துள்ள மற்றொரு கூற்றோ பெரும்பான்மை அறிஞர்களின் கருத்தோடு ஒத்துப்போகக்கூடியதாக உள்ளது; அதாவது நபியவர்களின் பெயரால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வது கூடாது என்பதாகும்.
எனவே, வானவர்கள் மற்றும் ஏனைய நபிமார்களை போலவே நபியவர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வது கூடாது. ஸலஃபுகளிலோ அல்லது இமாம்களிலோ எவரும் படைப்பினங்களைக் கொண்டு அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யலாம் என்று பொதுவாகக் கூறியதாக நாம் அறியவில்லை. இதன் காரணமாகவே, பேரறிஞர் அபூ முஹம்மத் இப்னு அப்திஸ் ஸலாம் அவர்கள் பின்வருமாறு ஃபத்வா வழங்கியுள்ளார்கள்: 'வானவர்கள், நபிமார்கள் அல்லது அவர்கள் அல்லாத வேறு எவரைக் கொண்டும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வது கூடாது; ஆனால், நபியவர்களின் பெயரால் சத்தியம் செய்வது குறித்து நபியவர்களிடமிருந்து ஒரு ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவரிடம் கூறப்பட்ட போது: ஒருவேளை அந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், அது நபியவர்களுக்கு மட்டுமே உரிய பிரத்தியேகச் சிறப்பாகத்தான் கருதப்படும் என்று குறிப்பிட்டார்கள்.'
உண்மையில், குறிப்பிடப்பட்ட அந்த ஹதீஸ் நபியவர்களின் பெயரால் சத்தியம் செய்வதற்கு எவ்வித ஆதாரமாகவும் அமையாது. மேலும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்: [யாராவது சத்தியம் செய்வதாக இருந்தால் அவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும்; இல்லையெனில் அவர் மௌனமாக இருக்கட்டும்.] அத்துடன்: [அல்லாஹ் அல்லாத பிறரின் மீது எவர் சத்தியம் செய்கிறாரோ, நிச்சயமாக அவர் இணைவைத்துவிட்டார்]' என்றும் கூறியுள்ளார்கள்.
பிரார்த்தனை (துஆ) என்பது ஒரு உன்னதமான வழிபாடாகும்; வழிபாடுகளின் அடித்தளமோ மார்க்க ஆதாரங்களின் அடிப்படையிலும், நபியைப் பின்பற்றுவதிலும் அமைந்து உள்ளதே தவிர, சுய விருப்பங்களின் அடிப்படையிலோ அல்லது மார்க்கப் புதுமைகளின் அடிப்படையிலோ அமைந்தது அல்ல. அல்லாஹ்வே மிக அறிந்தவன்.” (முற்றிற்று) (மஜ்மூஉல் ஃபதாவா - பாகம்: 1, பக்கம்: 140).
மூன்றாவதாக:
மார்க்க அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவக்கூடிய ‘அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போது நபியின் அந்தஸ்தைப் பொருட்டாகக் கொள்ளுதல்’ எனும் இந்த விவகாரத்திற்கும், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்களிடம் நேரடியாக உதவி தேடுவதற்கும், அவர்களிடம் நேரடியாகப் பிரார்த்தனை செய்வதற்கும் இடையே கண்டிப்பாகப் பாரிய வேறுபாடு காணப்பட வேண்டும். ஏனெனில், அவர்களிடம் நேரடியாக உதவி தேடுவது என்பது மார்க்க அறிஞர்கள் மத்தியில் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லாத தெளிவான பெரிய இணைவைத்தல் ஆகும்.
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) தங்களின் "மஜ்மூஉல் ஃபதாவா" நூலில் குறிப்பிட்டுள்ளதாவது:
"எவர் வானவர்களையும் நபிமார்களையும் தனக்கும் இறைவனுக்கும் இடையே இடைத்தரகர்களாக ஆக்கி; அவர்களிடம் நேரடியாகப் பிரார்த்தித்து, அவர்கள் மீது நம்பிக்கை வைத்து, நன்மைகளைப் பெற்றுத் தருமாறும் தீமைகளை நீக்குமாறும் அவர்களிடம் கோருகிறாரோ உதாரணமாக: தங்களின் பாவங்களை மன்னிக்குமாறும், உள்ளங்களுக்கு நேர்வழி காட்டுமாறும், கவலைகளைப் போக்குமாறும், வறுமைகளை நீக்குமாறும் அவர்களிடம் நேரடியாகக் கோருகிறாரோ அவர் முஸ்லிம்களின் ஏகோபித்த முடிவின்படி மார்க்கத்தை விட்டு வெளியேறியவர் ஆவார்." (முற்றிற்று) (மஜ்மூஉல் ஃபதாவா - பாகம்: 1, பக்கம்: 124).
மார்க்க அறிஞர்கள் பலர் இந்த ஏகோபித்த முடிவை தங்களின் நூட்களில் முழுமையாக பதிவு செய்துள்ளனர். இது குறித்துப் பார்க்க வேண்டிய நூட்கள்: இப்னு முஃப்லிஹ் எழுதிய "அல்-ஃபுரூஃ" (6/165), "அல்-இன்ஸாஃப்" (10/327), "கஷ்ஷாஃபுல் கினாஃ" (6/169), மற்றும் "மதாலிபு ஊலின் நுஹா" (6/279).
ஹாஃபிழ் இப்னு அப்தில் ஹாதி (ரஹிமஹுல்லாஹ்) தங்களின் "அல்-ஸாரிம் அல்-முன்கி ஃபீ அர்-ரத்தி அலல் ஸுப்கி" நூலில் குறிப்பிட்டுள்ளதாவது:
"நபியவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்களிடம் நேரடியாகப் பிரார்த்தனை செய்வதும், தமக்காகப் பாவமன்னிப்புத் தேடுமாறும் அல்லது பரிந்துரை செய்யுமாறும் நேரடியாக அவர்களிடம் கோருவதும், இஸ்லாமிய இமாம்களில் எவரிடமிருந்தும் நான்கு இமாம்களிடமிருந்தோ அல்லது அவர்கள் அல்லாத வேறு எவரிடமிருந்தோ ஒருபோதும் அறிவிக்கப்படவில்லை. மாறாக, அந்த இமாம்கள் தங்களின் நூட்களில் குறிப்பிட்டுள்ள அனைத்துப் பிரார்த்தனை முறைகளும் இத்தகைய செயல்களை விட்டும் முற்றிலும் தூய்மையானவையாகவே உள்ளன." (முற்றிற்று). (அல்-ஸாரிம் அல்-முன்கி - பக்கம்: 136).
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.