அந்-நிஃமத்துல் குப்ரா’ என்ற நூலில், நபியவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுவதை ஆதரித்து சிறந்த நூற்றாண்டிற்குரிய அறிஞர்கள் கூறியதாகச் சில செய்திகள் இடம்பெற்றுள்ளன. இந்தச் செய்திகளின் உண்மைத்தன்மை குறித்த விபரங்கள்.

கேள்வி 325453

இப்னு ஹஜர் அல்-மக்கீ அவர்கள் தங்களது புகழ்பெற்ற 'அந்-நிஃமத்துல் குப்ரா' என்ற புத்தகத்தில், மீலாது விழா கொண்டாடுவது தொடர்பாக நேர்வழி பெற்ற கலீஃபாக்கள் கூறியதாகச் சில சிறந்த வாசகங்களை மேற்கோள் காட்டியுள்ளார். உதாரணத்திற்கு: உமர் (ரலி) அவர்கள், “யார் நபியவர்களின் பிறந்த நாளை கண்ணியப்படுத்துகிறாரோ, அவர் இஸ்லாமிய மார்க்கத்தையே உயிர்ப்பித்தவரைப் போன்றவர் ஆவார்” என்று கூறியதாக அதில் பதியப்பட்டுள்ளது. இவ்வாறான செய்திகளின் உண்மைத்தன்மை என்ன?.

பதில்

அல்லாஹ்வுக்கே புகழும், இறைவனின் தூதர் மீது பிரார்த்தனையும் சாந்தியும் உண்டாகட்டும்,

நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்தப் புத்தகத்தை நாங்கள் ஆய்வு செய்து பார்த்தோம். அது இஸ்தான்புல் நகரில் அச்சிடப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வித சந்தேகமுமின்றி உறுதியாகக் கூறக்கூடிய விடயம் என்னவென்றால்: இந்தப் பதிப்பானது ஒன்று இமாம் இப்னு ஹஜர் அல்-ஹைதமி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் பெயரால் பொய்யாக இட்டுக்கட்டப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும்.

அல்லது அந்தப் பதிப்பாளர் அந்த மூலப் பிரதியைச் சரியாகச் சரிபார்க்காமல் அச்சிட்டிருக்க வேண்டும். ஒருவேளை அவருக்கு 'அந்-நிஃமத்துல் குப்ரா' என்ற பெயரில் ஏதேனும் ஒரு கையெழுத்துப் பிரதி கிடைத்திருக்கலாம்; இப்னு ஹஜர் அவர்களுக்கும் இதே தலைப்பில் ஒரு புத்தகம் உண்டு என்பது அவருக்குத் தெரிந்திருந்ததால், இதுவும் அவருடையதுதான் என்று தவறாக எண்ணி அவர் பெயரில் அதனை வெளியிட்டிருக்கலாம். மேலும், இந்தப் பதிப்பில் அந்தப் புத்தகம் யாருடையது என்பதற்கான எவ்வித முறையான ஆதாரப்பூர்வமான ஆவணச் சான்றுகளும் இல்லை.

இந்தப் புத்தகம் இப்னு ஹஜர் அவர்களுக்குரியது அல்ல என்பதற்கான மிகத் தெளிவான ஆதாரங்களுள் ஒன்று: நேர்வழி பெற்ற நான்கு கலீஃபாக்கள் மற்றும் இதர முன்னோர்கள் (ஸலஃபுகள்) பலரின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட ஏராளமான பொய்யான செய்திகளைக் கொண்டே இந்தப் புத்தகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் நபியவர்களின் பிறந்தநாளை கண்ணியப்படுத்துமாறு மக்களைத் தூண்டியதாக அதில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், இக்கூற்று இமாம் இப்னு ஹஜர் அல்-ஹைதமி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் எழுதிய, தற்பொழுது 'இத்மாமுன் நிஃமத்தில் குப்ரா'(நிஃமதுல் குப்ராவின் முழுமையாக்கம்) என்ற தலைப்பில் அச்சிடப்பட்டிருக்கும் அவர்களது உண்மையான நூலில் உள்ள விபரங்களுக்கு முற்றிலும் முரணானதாகும். அவர்கள் அந்தப் புத்தகத்தை எழுதுவதற்கான காரணத்தை விவரிக்கும் போது தங்களது நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்:

'மீலாது விழா கொண்டாடுவதன் அடிப்படை குறித்தும், அது ஒரு மார்க்கப் புதுமையா (பித்அத்தா) இல்லையா என்பது குறித்தும் மக்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே இப்புத்தகத்தை எழுத என்னைத் தூண்டின. மேலும், கதை சொல்பவர்களும், மார்க்க போதனை செய்பவர்களும் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் சற்றும் அஞ்சாமல், சில நேரங்களில் தெரிந்தே திட்டமிட்டும், சில நேரங்களில் அறியாமையினாலும் அவர்கள் மீது பொய்யுரைத்து, இட்டுக்கட்டப்பட்ட செய்திகளையும், கதைகளையும், பொய்யாக உருவாக்கப்பட்ட கவிதைகளையும் இந்த மீலாது விழா குறித்து அதிகமாகக் கூறி வருகிறார்கள்...

நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்! நபியவர்களால் சிறந்த தலைமுறைகள் என்று சான்றளிக்கப்பட்ட முதல் மூன்று நூற்றாண்டுகளைச் சேர்ந்த முந்திய சான்றோர்கள் (ஸலஃபுகள்) எவரிடமிருந்தும் இந்த மீலாது விழாவைச் செய்ததாக எவ்வித ஆதாரமும் பதியப்படவில்லை.

இருப்பினும் (என்னைப் பொறுத்தவரை), ஏழைகளுக்கு அதிகமாக தர்மம் செய்தல், குர்ஆன் ஓதுதல், திக்ருகளை அதிகரித்தல், நபியவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லுதல் மற்றும் அவர்களின் பிறப்பைக் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துதல் போன்ற நல்ல காரியங்கள் இதில் நிறைந்துள்ளதால், இது ஒரு நல்ல புதுமையாகும் (பித்அத் ஹஸனா ஆகும்)...' (நூல்: இத்மாமுன் நிஃமத்தில் குப்ரா, பக்கம்: 15-22).

இதன் மூலம் தெளிவாக விளங்குவது என்னவென்றால்: ஷைக் இப்னு ஹஜர் அவர்களே தங்களது நூலில், நேர்மையான முன்னோர்களான ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள் எவரிடமிருந்தும் மவ்லித் கொண்டாடியதாகவோ அல்லது அதனைச் செய்யுமாறு மக்களைத் தூண்டியதாகவோ எவ்வித ஆதாரமும் பதியப்படவில்லை என்பதை மிகத் தெளிவாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இருப்பினும், நேர்மையான முன்னோர்களான ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள் எவருமே இந்த மவ்லிதைச் செய்யவில்லை என்பதை ஷைக் அவர்களே மிகத் தெளிவாக ஒப்புக்கொண்ட பிறகும், இதனை ஒரு 'நல்ல புதுமை' (பித்அத் ஹஸனா) என்று கூறி அவர் முன்வைக்கும் வாதமானது மார்க்க அறிஞர்களிடையே ஆதாரங்களை அணுகுவதற்கென வகுக்கப்பட்டுள்ள அடிப்படை விதிகள் மற்றும் கோட்பாடுகளுக்கு முற்றிலும் ஒத்துப் போகாத, ஒரு மிகவும் பலவீனமான வாதமாகும்.

 இது குறித்தான விரிவான மார்க்க விளக்கங்கள் ஏற்கனவே எமது இணையதளத்தில் கேள்வி எண்: (128530)-க்கான பதிலில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன.

எனவே இதன் சுருக்கம்: நீங்கள் கேட்டுள்ள அந்தப் புத்தகமும், அதில் நேர்வழி பெற்ற கலீஃபாக்கள் மவ்லிதை ஊக்கப்படுத்தியதாக இடம்பெற்றுள்ள செய்திகள் அனைத்தும் இமாம் இப்னு ஹஜர் அல்-ஹைதமி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் பெயரால் முற்றிலும் பொய்யாக இட்டுக்கட்டப்பட்டவைகளாகும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

மூலநூட்கள்

பலவீனமான ஹதீஸ்கள்

மூலம்

இஸ்லாம் கேள்வி-பதில் இணையதளம்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android