அஷ்அரிய்யாக்கள் என்பவர்கள் யார், அவர்கள் அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஅத்தைச் சார்ந்தவர்களா?

கேள்வி 226290

அஷ்அரிய்யாக்கள் என்பவர்கள் யார்? அவர்கள் அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஅத்தைச் சார்ந்தவர்களா? மேலும், இமாம் அந்-நவவீ (ரஹிமஹுல்லாஹ்) போன்ற மார்க்க அறிஞர்கள் பலர் உண்மையில் அஷ்அரி கொள்கை வழிமுறையைப் பின்பற்றித்தான் இருந்தார்களா?

பதில்

அல்லாஹ்வுக்கே புகழும், இறைவனின் தூதர் மீது பிரார்த்தனையும் சாந்தியும் உண்டாகட்டும்,

முதலாவதாக:
அஷ்அரிய்யாக்கள் என்பவர்கள் இமாம் அபுல் ஹஸன் அல்-அஷ்அரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் பெயரால் அடையாளப்படுத்தப்படும் ஒரு பிரிவினராவர். இமாம் அபுல் ஹஸன் அல்-அஷ்அரி அவர்கள் தங்களின் வாழ்நாளில் அகீதா விடயத்தில் பல்வேறு கொள்கை நிலைகளைக் கடந்து வந்தார்கள்:

  • முதல் நிலை: தொடக்கத்தில் அவர் முஃதஸிலா கொள்கையில் இருந்தார்; அக்கொள்கையிலேயே கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் நீடித்திருந்தார்.
  • இரண்டாம் நிலை: அதன் பின்னர் முஃதஸிலா கொள்கையிலிருந்து விலகி, அப்துல்லாஹ் பின் ஸயீத் பின் குல்லாப் என்பவரின் கொள்கை வழியை ஏற்று, அதன் பால் ஈர்க்கப்பட்டார். (இமாம் இப்னு குஸைமா அவர்கள் பதிவு செய்துள்ளபடி) இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்கள், இந்த அப்துல்லாஹ் பின் ஸயீத் பின் குல்லாப் மற்றும் அவர்தம் தோழர்களான அல்-ஹாரிஸ் உள்ளிட்டோர் மீது கடுமையான மார்க்கப் போக்கைக் கையாண்டவர்களில் மிக முதன்மையானவராவார். (பார்க்க: ஸியர் அஃலாமின் நுபலா - 14/380, மற்றும் இப்னு தைமிய்யாவின் தர்உத் தஆருள் - 2/6).

இமாம் அல்-அஷ்அரி அவர்கள் இப்னு குல்லாபின் கொள்கையிலிருந்து விலகி, அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஅத்தின் தூய கொள்கை முறைக்கு முழுமையாகத் திரும்பினாரா, அல்லது அக்கொள்கையிலேயே நீடித்து அதிலிருந்து திரும்பவில்லையா என்பதில் மார்க்க அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது:

  • முதல் கருத்து: அவர் அஹ்லுஸ் சுன்னாவின் தூய கொள்கைக்கு முழுமையாகத் திரும்பிவிட்டார் என்று ஒரு தரப்பு அறிஞர்கள் கருதுகின்றனர்; ஹாஃபிழ் இப்னு கஸீர் மற்றும் தற்கால அறிஞர்களில் ஷேக் ஹாஃபிழ் அல்-ஹகமி ஆகியோர் இக்கருத்தையே கொண்டுள்ளனர். அவர்கள் தங்களின் வாதத்திற்கு, இமாம் அல்-அஷ்அரி அவர்களின் இறுதி நூலான 'அல்-இபானா அன் உஸூலித் தியானா' நூலில் உள்ள அவரது பின்வரும் அதிகாரப்பூர்வ கூற்றுகளை ஆதாரமாகக் கொள்கின்றனர்:

"நாம் கூறக்கூடிய உன்னதமான வார்த்தையும், நாம் வழிபடக்கூடிய நமது தூய மார்க்கக் கொள்கையும் யாதெனில்: நமது இறைவனான அல்லாஹ்வின் குர்ஆனையும், நமது நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் சுன்னாவையும், கண்ணியமிக்க நபித்தோழர்கள், தாபியீன்கள் மற்றும் ஹதீஸ் கலை இமாம்களிடமிருந்து அறிவிக்கப்பட்ட பதிவுகளையும் மிக உறுதியாகப் பற்றிக் கொள்வதாகும்; நாம் அவற்றையே ஆதாரமாகக் கொள்கிறோம். மேலும், அபூ அப்தில்லாஹ் அஹ்மத் பின் முஹம்மத் பின் ஹன்பல் (அல்லாஹ் அவரது முகத்தைப் பிரகாசமாக்குவானாக, அவரது அந்தஸ்தை உயர்த்துவானாக, அவரது நற்கூலியை வாரி வழங்குவானாக) அவர்கள் எவற்றை சொன்னார்களோ, அவற்றையே நாமும் சொல்கிறோம்; அவரது கூற்றுகளுக்கு மாறுபட்டவர்களின் கொள்கைகளை நாம் முழுமையாக நிராகரிக்கிறோம். ஏனெனில் அவர் எத்தகைய உன்னத இமாமும் முழுமையான தலைவருமாவார் என்றால், அவர் மூலமாக அல்லாஹ் சத்தியத்தை வெளிப்படுத்தினான், வழிகேடுகளை அடக்கினான், நேரான மார்க்கப் பாதையைத் தெளிவுபடுத்தினான் மற்றும் பித்அத்வாதிகளின் புதுமைகளையும், வழிகெட்டவர்களின் கோணல்களையும், சந்தேகப்படுபவர்களின் ஐயங்களையும் அடியோடு ஒடுக்கினான். எனவே, முன்னிலைப்படுத்தப்பட்ட மாபெரும் இமாமும், கண்ணியமிக்க மேதையுமான அவர் மீது அல்லாஹ்வின் பேரருள் உண்டாவதாக." (முற்றிற்று.) (அல்-இபானா - பக்கம்: 20).

இக்கூற்றானது, இமாம் அஹ்மத் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்திய ஸலஃபுகளின் தூய கொள்கை முறைக்குத் தான் முழுமையாகத் திரும்பிவிட்டதாகவும், அவரது வார்த்தைகளையே தானும் கூறுவதாகவும் இமாம் அல்-அஷ்அரி அளித்த தெளிவான பிரகடனமாகும். இமாம் அஹ்மத் அவர்களோ குல்லாபிய்யா கொள்கை மீது மிகக் கடுமையான போக்கைக் கொண்டிருந்தார்; அதன் காரணமாகவே அல்-ஹாரிஸ் அல்முஹாஸிபி குல்லாபிய்யா கொள்கையைக் கொண்டிருந்ததால் அவரை வெறுத்து  விலகி இருந்தார்.

  • இரண்டாவது கருத்து: இமாம் அல்-அஷ்அரி அவர்கள் குல்லாபிய்யா கொள்கையிலிருந்து முழுமையாக விடுபடவில்லை; மாறாக அவர் பல மார்க்க விவகாரங்களில் அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஅத்தின் தூய கொள்கைக்கு மிக நெருக்கமாக வந்தார் என்று மற்றொரு தரப்பு அறிஞர்கள் கருதுகின்றனர்.

இக்கருத்தை இமாம் இப்னு தைமிய்யா, இமாம் இப்னுல் கய்யிம் உள்ளிட்ட பல அறிஞர்கள் வலுப்படுத்துகின்றனர். இமாம் அல்-அஷ்அரி அவர்கள் 'அல்-இபானா' நூலில் அஹ்லுஸ் சுன்னாவின் கொள்கைக்கு மிக நெருக்கமாக வந்தபோதிலும், அவரிடம் இப்னு குல்லாபின் கொள்கையின் சில தாக்கங்கள் எஞ்சியிருந்தன என்பது தான் அவர்களின் வாதமாகும்.

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் குறிப்பிடுகிறார்கள்: "அல்-அஷ்அரி அவர்கள் முஃதஸிலாக்களின் மாணவராக இருந்து பின்னர் அதிலிருந்து தவ்பா செய்திருந்த போதிலும், அவர் அல்-ஜுப்பாயீயின் மாணவராகவே இருந்தார்; அதன் பின்னர் இப்னு குல்லாபின் கொள்கையின் பால் சாய்ந்தார். பஸ்ரா நகரில் ஜகரிய்யா அல்-ஸாஜியிடமிருந்து ஹதீஸ் கலையின் அடிப்படைகளைக் கற்ற அவர், பின்னர் பக்தாத் நகருக்கு வந்தபோது அங்குள்ள ஹன்பலி அறிஞர்களிடமிருந்து ஏனைய மார்க்க விவகாரங்களைக் கற்றுக் கொண்டார்; இதுவே அவரது இறுதி நிலையாகும் என்பதை அவரும் அவரது தோழர்களும் தங்களின் நூட்களில் பதிவு செய்துள்ளனர்." (முற்றிற்று.) (மஜ்மூஉல் ஃபதாவா - 3/228).

(பார்க்க: ஷேக் அப்துர் ரஹ்மான் அல்-மஹ்மூத் எழுதிய 'மவ்கிஃபு இப்னி தைமிய்யா மினல் அஷாஇரா' - 1/390).

பிற்காலத்து அஷ்அரிய்யாக்களில் பெரும்பாலானோர், இமாம் அபுல் ஹஸன் அல்-அஷ்அரி அவர்களின் தூய கொள்கை வரம்புகளைப் பேணவில்லை; மாறாக, அவர்கள் தங்களின் கொள்கை நெறிமுறைகளில் ஜஹ்மியாக்கள், முஃதஸிலாக்கள் மற்றும் தத்துவஞானிகளின் பல வழிகெட்ட அடிப்படைக் கோட்பாடுகளைக் கலந்துவிட்டனர். அதுமட்டுமன்றி, அவர்கள் இமாம் அல்-அஷ்அரி அவர்களின் பல நேரடித் தீர்ப்புகளுக்கே முற்றிலும் மாறுபட்டனர். உதாரணமாக, அவர்கள் அல்லாஹ்வின் அர்ஷின் மீது உயர்வடைந்தது (இஸ்திவா), அவனது மேலாதிக்கம் (உலூவ்), இறங்கி வருதல் (நுஸூல்), கை (யத்), கண் (ஐன்), பாதம் (கதம்) மற்றும் பேச்சு (கலாம்) ஆகிய எதார்த்தப் பண்புகளை அடியோடு மறுக்கின்றனர்; இப்பண்புகள் அனைத்திலும் அவர்கள் இமாம் அல்-அஷ்அரி அவர்களின் நேரடிக் கொள்கைக்கே முற்றிலும் முரண்பட்டுகின்றனர்.

இரண்டாவதாக:
"அஹ்லுஸ் சுன்னா" என்ற உன்னதப் பெயர் இரண்டு வெவ்வேறான மார்க்கக் கோணங்களின் அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது:

முதலாவது: ராஃபிழாக்களுக்கு (ஷியாக்களுக்கு) எதிரானவர்களைக் குறிப்பதற்காக இப்பதத்தைப் பயன்படுத்தும் போது, அஷ்அரிய்யாக்கள், மாதுரீதிய்யாக்கள் மற்றும் அவர்களுக்கு ஒத்த கொள்கையுடையோரும், ஏன் முஃதஸிலாக்கள் கூட இந்த "அஹ்லுஸ் சுன்னா" என்ற பொது வட்டத்திற்குள் அடங்குவர்.

இரண்டாவது:
பித்அத்துகளை (மார்க்கப் புதுமைகளை) முழுமையாக நிராகரித்து அதற்கு எதிரான தூய்மையான கொள்கையைக் குறிப்பதற்காக இப்பதத்தைப் பயன்படுத்தும் போது, இதன் பொருள்: தூய்மையான சுன்னாவைப் பின்பற்றுபவர்கள் என்பதாகும். இதனடிப்படையில், ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள் மற்றும் ஹதீஸ் கலை அறிஞர்களின் தூய கொள்கை நெறிமுறைகளை முழுமையாகப் பேணியவர்களைத் தவிர வேறு எவரும் இந்த வட்டத்திற்குள் நுழைய முடியாது. எனவே, தங்களின் தத்துவார்த்த அடிப்படைகளோடு பித்அத்தான பல கொள்கைக் கோட்பாடுகளைக் கலந்து, பல்வேறு மார்க்க விதிகளிலும் கிளை விவகாரங்களிலும் சுன்னாவின் தூய கொள்கைக்கு முரண்பட்டு நிற்கும் அஷ்அரிய்யாக்களோ அல்லது அவர்களைப் போன்ற பிறரோ இந்த உன்னதப் பெயருக்குள் அடங்க மாட்டார்கள்.

பிற்காலத்து அஷ்அரிய்யாக்களைப் பொறுத்தவரை: அவர்கள் அல்லாஹ்வின் விதி விவகாரத்தில் ஜப்ரிய்யாக்களாகவும்(மனிதனுக்கு தேர்வு சுதந்திரம் இல்லை), ஈமான் விவகாரத்தில் முர்ஜியாக்களாகவும், அல்லாஹ்வின் பண்புகள் விவகாரத்தில் அவற்றை மறுப்பவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் தங்களின் தர்க்க ரீதியான பகுத்தறிவு ஏற்றுக் கொள்வதாக கூறிக்கொள்ளும் வெறும் ஏழு பண்புகளைத் தவிர வேறு எதனையும் அல்லாஹ்விற்கு நிரூபிப்பதில்லை. மேலும், அவர்கள் இறைவன் அர்ஷின் மீது உயர்வடைந்தது (இஸ்திவா) மற்றும் படைப்பினங்களுக்கு மேல் அவன் உயர்ந்து நிற்பது (உலூவ்) ஆகியவற்றை அடியோடு மறுப்பதுடன்: "அவன் உலகிற்கு உள்ளேயும் இல்லை, வெளியேயும் இல்லை, அதற்கு மேலேயும் இல்லை, கீழேயும் இல்லை..." என்பது போன்ற பல மார்க்க முரண்பாடுகளைக் கூறுகின்றனர். நிலைமை இவ்வாறு இருக்க, நாம் அவர்களை எவ்வாறு "அஹ்லுஸ் சுன்னா" என்று அழைக்க முடியும்?!

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்:

"அஹ்லுஸ் சுன்னா என்ற பதம், (அபூபக்கர், உமர், உதுமான் ஆகிய) மூன்று கலீஃபாக்களின் தகுதியை ஏற்றுக்கொண்டவர்களைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் போது, ராஃபிழாக்களைத் (ஷியாக்களைத்) தவிர ஏனைய அனைத்துப் பிரிவினரும் இந்த வட்டத்திற்குள் அடங்குவர்.

ஆனால், அதுவே ஹதீஸ் கலை அறிஞர்களையும், தூய்மையான சுன்னாவின் காவலர்களையும் பிரத்தியேகமாகக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் போது, அல்லாஹ்வின் அழகிய பண்புகளை குர்ஆன் ஹதீஸில் உள்ளபடி ஏற்கும் தூய நல்லடியார்களைத் தவிர வேறு எவரும் இந்த வட்டத்திற்குள் நுழைய முடியாது." (முற்றிற்று). (மின்ஹாஜுஸ் ஸுன்னா - 2/221).

இமாம் இப்னு உஸைமீன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்:

"ராஃபிழாக்களுக்கு (ஷியாக்களுக்கு) எதிரானவர்களைக் குறித்துப் பேசும் போது, அஹ்லுஸ் சுன்னா என்ற சொல்லிற்குள் முஃதஸிலாக்கள், அஷ்அரிய்யாக்கள் மற்றும் தங்களின் பித்அத்தின் காரணமாக காஃபிர் என்று தீர்ப்பளிக்கப்படாத ஏனைய அனைத்துப் பிரிவினரும் அடங்குவர்.

ஆனால், நாம் அஹ்லுஸ் சுன்னாவின் தூய்மையான எதார்த்த நிலையைத் தெளிவுபடுத்த முற்படும் போது: 'நிச்சயமாக சுன்னாவின் அடிப்படையில் ஒன்றுபட்டு அதனை முழுமையாகப் பற்றிக் கொண்ட ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள் மட்டுமே உண்மையான அஹ்லுஸ் சுன்னா ஆவர்' என்று கூறுவோம். அத்தகைய உன்னத அர்த்தத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, அஷ்அரிய்யாக்கள், முஃதஸிலாக்கள் மற்றும் ஜஹ்மியாக்கள் போன்றோர் எவருமே அஹ்லுஸ் சுன்னாவைச் சார்ந்தவர்கள் அல்லர்." (முற்றிற்று) (அஷ்-ஷரஹ் அல்-மும்திஃ - 11/306).

மூன்றாவதாக:
ஒருவர் அஷ்அரிய்யாக்களின் கொள்கை நெறிமுறைகளை (அகீதாவை) முழுமையாகப் பின்பற்றியிருந்தால் மட்டுமே அவரை அஷ்அரிய்ய சிந்தனையோடு இணைத்துக் கூற முடியும். மாறாக, சில மார்க்க விவகாரங்களில் மட்டும் அவர்களுக்கு உடன்பட்டு, ஏனைய விவகாரங்களில் அவர்களுக்கு மாறுபட்டிருந்தால், அவரை அஷ்அரிய்யாக்களுடன் இணைத்துக் கூறுவது மார்க்க ரீதியாகச் செல்லுபடியாகாது.

ஹதீஸ் கலைப் பேரறிஞர்களான இமாம் அந்-நவவீ மற்றும் ஹாஃபிழ் இப்னு ஹஜர் ஆகிய இருவர் குறித்து இமாம் இப்னு உஸைமீன் அவர்கள் தங்களின் விளக்கவுரையில் குறிப்பிட்டுள்ளதாவது:

"இவ்விரு மாபெரும் அறிஞர்களையும், இவர்களைப் போன்ற பிறரையும் நாம் அஷ்அரிய்யாக்களுடன் இணைத்துக் கூறி, 'இவர்கள் இருவரும் அஷ்அரிய்யாக்கள்' என்று வர்ணிப்பது சரியாகுமா? இதற்கான பதில்: இல்லை (கூடாது). ஏனெனில், அஷ்அரிய்யாக்கள் என்பவர்கள் அல்லாஹ்வின் திருநாமங்கள், பண்புகள், ஈமான் மற்றும் மறுமையின் நிகழ்வுகள் ஆகிய விவகாரங்களில் தங்களுக்கு என்று தனித்துவமான ஒரு மத்ஹபைக் (கொள்கை நெறிமுறையைக்) கொண்ட தனி அமைப்பினர் ஆவர். நமது சகோதரர் ஸஃபர் அல்-ஹவாலி அவர்கள் இவர்களின் கொள்கை குறித்து எழுதியுள்ள விபரங்கள் எவ்வளவு அருமையானவை! ஏனெனில், பெரும்பாலான மக்கள் அஷ்அரிய்யாக்கள் என்பவர்கள் அல்லாஹ்வின் திருநாமங்கள் மற்றும் பண்புகள் விவகாரத்தில் மட்டுமே ஸலஃபுகளுக்கு மாறுபட்டவர்கள் என்று புரிந்து வைத்துள்ளனர்; ஆனால், உண்மையில் அவர்களுக்கு இடையே இன்னும் ஏராளமான கொள்கை முரண்பாடுகள் உள்ளன.

எனவே, ஒரு மனிதர் அல்லாஹ்வின் பண்புகள் தொடர்பான ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மார்க்கப் பிரச்சினையில், அவர்களின் கொள்கைக்கு உடன்படும் ஒரு கருத்தைக் கூறிவிட்டார் என்பதற்காக, நாம் அவரை 'அஷ்அரி' என்று அழைத்துவிடக் கூடாது. உதாரணமாக, ஹன்பலி மத்ஹபைச் சார்ந்த ஒரு மனிதர், ஏதேனும் ஒரு சட்ட விவகாரத்தில் ஷாஃபிஈ மத்ஹபின் கருத்தைத் தேர்ந்தெடுத்துக் கூறினால், நாம் அவரை 'ஷாஃபிஈ’ என்று அழைத்துவிடுவோமா?" (முற்றிற்று.) (நூல்: ஷரஹ் அல்-அர்பஊன் அந்-நவவிய்யா - பக்கம்: 290).

மேலும் அவர்கள் (ரஹிமஹுல்லாஹ்) குறிப்பிட்டுள்ளதாவது:

"குறிப்பாக இவ்விரு மாமனிதர்களைப் பொறுத்தவரை, அல்லாஹ்வின் தூதரின் ஹதீஸ்களைப் பாதுகாக்கும் மார்க்கப் பணியில், இவர்கள் இருவரும் இஸ்லாத்திற்கு ஆற்றிய பங்களிப்பைப் போன்று தற்காலத்தில் வேறு எவரும் ஆற்றியதாக நான் அறியவில்லை. அல்லாஹுதஆலா, அவர்கள் தங்களது பேராற்றலினாலும் வலிமையினாலும் ஆற்றிய மார்க்கப் பணிகளை முழுமையாக ஏற்றுக்கொண்டான் என்பதற்கு (அல்லாஹ்வின் மீது நான் முன்கூட்டியே எவ்விதத் தீர்ப்பும் வழங்கவில்லை, எனினும்) இவர்களின் நூட்களுக்கு உலக மக்களிடமும், கல்வி கற்பவர்களிடமும், ஏன் பொதுமக்கள் மத்தியிலும் கிடைத்துள்ள மாபெரும் வரவேற்பே தெளிவான சான்றாகும். தற்காலத்தில் 'ரியாளுஸ் ஸாலிஹீன்' எனும் உன்னத நூல் உலகிலுள்ள ஒவ்வொரு சபையிலும், ஒவ்வொரு பள்ளிவாசலிலும் வாசிக்கப்படுகிறது; மக்கள் இதன் மூலம் மாபெரும் நற்பயன்களைப் பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்த மக்களும் தங்களின் வீடுகளிலும் பள்ளிவாசல்களிலும் படித்துப் பயன்பெறக்கூடிய இத்தகையதொரு உன்னத நூலை எனக்காகவும் அல்லாஹ் ஆக்கித் தர வேண்டுமென்றே நான் பெரிதும் ஆசைப்படுகிறேன்."

(முற்றிற்று). (நூல்: லிகாஆத்துல் பாபில் மஃப்தூஹ் - அமர்வு எண்: 43).

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

மூலநூட்கள்

மத்கப்களும் பிரிவுகளும்

மூலம்

இஸ்லாம் கேள்வி-பதில் இணையதளம்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android