சேமி
  • புதிய பட்டியல்
மேலும்
    சேமி
    • புதிய பட்டியல்
201/சபர்/1446 , 05/ஆகஸ்ட்/2024

இஸ்லாத்தில் இபாதத்தின் நிபந்தனைகள்

கேள்வி: 21519

இஸ்லாத்தில் செல்லுபடியாகும் இபாதத்தின்  நிபந்தனைகள் என்ன?

பதில்

அல்லாஹ்வுக்கே புகழும், இறைவனின் தூதர் மீது பிரார்த்தனையும் சாந்தியும் உண்டாகட்டும்,

மார்க்க அறிஞர் அஷ்ஷேக் முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உசைமின் கூறுகிறார்கள், ஒரு இபாதத் மார்க்கத்தின் ஆறு விடயங்களில் ஒத்ததாக இருக்க வேண்டும்.

 முதலாவது :  இபாதத் அதன் காரணத்தில் அல்லது அடிப்படையில் ஒத்ததாக இருக்க வேண்டும்.

ஒரு மனிதன் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத அடிப்படையில் ஒரு இபாதத்தை அல்லாஹ்வுக்காக செய்தால் அந்த செயல் மறுக்கப்பட்டதாகும்.

 உதாரணமாக மீலாது விழா கொண்டாடுதல், ரஜப்  27ஆம் இரவு மிஃராஜ் தினமாக கொண்டாடுதல்.  இது மார்க்கத்திற்கு முரணானதாகும். ஏனென்றால் ரஜப் 27ம்  இரவு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஃராஜ் விண்ணுலக யாத்திரை சென்றதற்கான எந்த ஒரு வரலாற்று சான்றுகளும் இல்லை. அதே போன்று சரியான அறிவிப்பாளர்கள் வரிசைகள் கொண்ட ஸஹீகான ஹதீஸ்கள் அடங்கிய எந்த ஹதீஸ் கிரந்தங்களிலலும்  இல்லை. ஒரு வேலை இந்த தினம் பற்றிய ஹதீஸ் சரியென்று கருதினாலும் அந்த தினத்தை விழா கொண்டாடும் தினமாகவோ அல்லது அதில் ஒரு புது இபாதத்தை உண்டாக்குவோ முடியுமா எனக் கேட்டால் ஒருபோதும் முடியவே முடியாது. இதேபோன்று  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா வந்த வேளை அன்சாரி தோழர்கள் இரு தினங்களை பெரு நாட்களாக கொண்டாடி விளையாடி மகிழ்வதை கண்டார்கள். அவ்வேளை " நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு இந்த இரு தினங்களை விட சிறந்த தினங்களாக நோன்பு பெருநாளையும் ஹஜ் பெருநாளையும் பகரமாக கொடுத்துள்ளான் என்று கூறினார்கள்."  இந்த சம்பவம் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட

 மூன்று பெரு நாட்களான இரண்டு வருடாந்த ( ஈதுல் பித்ர்,ஈதுல் அழ்ஹா)  மற்றும் வாராந்த பெருநாளாக (வெள்ளிக்கிழமை)  தவிர்ந்த வேறு எந்த பெருநாளும் கொண்டுவது என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வெறுப்புக்கு சான்றாக அமைகின்றது.

ரஜப் 27ம் இரவு மிஃராஜ் தினமாக அமைந்தாலும் அந்த இரவிலே ஒரு இபாதத்தை புதிதாக அல்லாஹ்வின் அனுமதியின்றி உருவாக்குவது முடியவே முடியாத காரியமாகும்.  நான் உங்களுக்கு முன்பு கூறியது போன்று பித்அத்துக்கள் ( இஸ்லாத்தில் இல்லாத நூதன விடயங்கள்)  விபரீதமானதாகும். மேலும் உள்ளங்களுக்கு அவைகளின் தாக்கம் மிக மோசமானதாகும். பித்தத்தை செய்யும்  அந்த சந்தர்ப்பத்தில் மனிதன் தனது உள்ளத்தில் மென்மையை உணர்ந்தாலும், பின்பு அதன் நஷ்டத்தையும் கைசேதத்தையும் அடைந்துவிடுகிறான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தூதுத்துவத்தை பூரணமாக எத்தி வைக்கவில்லை என்றும்,  அல்லாஹ் " நான் இந்த மார்க்கத்தை இன்றுடன் பூர்த்தியாக்கி விட்டேன் மேலும் இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்றுக் கொண்டு எனது அருளை உங்களுக்கு அன்பளித்து விட்டேன் "  என்று கூறியிருக்க இந்த மார்க்கம் குறைபாடானது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விடும். இவ்வாறான பித்அத்துகளில்  மூழ்கியவர்கள் சரியானதும் பயனுள்ள விடயங்களில் பராமுகமாக இருப்பதுடன் இவ்வாறான பித்அத்துக்களில் கரிசனையுடன் இருப்பது ஆச்சரியமானதாகும்.  இதனால் மிஃராஜ் தினமாக கொண்டாடப்படும் ரஜப் 27ஆம் இரவு  மார்க்க அடிப்படைக்கு முரணானதாகும் என  நாம் கூறுகிறோம்.

இரண்டாவது :  இபாதத் அதனுடைய வகையில் மார்க்கத்திற்கு ஒத்ததாக இருத்தல் .

உதாரணமாக ஒரு மனிதன் குதிரையை குர்பான் (அறுத்து பலியிடுவதை ) செய்வது போன்றதாகும். இவ்வாறு குதிரையை குர்பான் செய்வதால் ஒரு இபாதத் அதன் வகையில் மார்க்கத்திற்கு முரணாக அமைகிறது குர்பான் என்பது ஆடு மாடு ஒட்டகம் போன்ற கால்நடைகள் மாத்திரமே கொடுக்க முடியும்..

மூன்றாவது : இபாதத் அதன் அளவில் மார்க்கத்திற்கு ஒத்ததாக இருத்தல்.

 ஒரு மனிதன் தொழுகையை ஆறு ரக்அத்துகள் தொழுகின்றேன் என்று கூறினால் அது மார்க்கத்திற்கு அதன் அளவில்  ஒத்ததாக  இல்லவே இல்லை. ஏனென்றால் லுஹர் தொழுகை நான்கு ரக்அத்துகள் தான் தொழ வேண்டும் என்பது மார்க்கம் கூறிய அளவாகும் .  ஆறு ரக்அத்துகள் தொழுவது மார்க்கம் கூறிய அந்த இபாதத்தின் அளவில் மாற்றமாகும்.  எனவே ஒரு இபாதத்தின் அளவில் மார்க்கம் கூறியபடி இருப்பது அவசியமாகும்.  ஒருவர் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர்  என்ற திக்ருகளை 35 தடவை கூறினால் அதை ஏற்றுக்கொள்ளப்படுமா???  அதற்கு நாம் கூறும் பதில் :  அந்த எண்ணிக்கையை வணக்கமாக கருதி செய்தால் நீ தவறிழைத்தவனாகுவாய் . அந்த எண்ணிக்கையில் அதிகரிப்பை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்ததை விட அதிகரித்ததாக கருதி,  அதை வணக்கமாக நினைக்காமல் செய்தால் பரவாயில்லை.  ஏனென்றால், இந்த இடத்தில் நீ வணக்கத்தையும்  அதிகரிப்பையும் வேறுபடுத்தி காட்டினாய்.

நான்காவது.: இபாதத் மார்க்கத்திற்கு அதன் அமைப்பில் ஒத்ததாக இருத்தல்.

ஒரு மனிதர் ஒரு இபாதத்தை அதன் அளவிலும் அதன் வகையிலும் அதன் காரணத்திலும் மார்க்கத்திற்கு ஏற்றவாறு செய்து அதனுடைய அமைப்பில் மாற்றமாக செய்தால் அந்த இபாதத் ஏற்புடையதாக இருக்காது.

 அதற்கு உதாரணம்

ஒரு மனிதர் சிறு தொடக்கு ஏற்பட்டு வுழூ செய்கிறார்,  என்றாலும் அவர் கால்களை கழுவி விட்டு பின்பு தலையை தடவுகிறார்,  பின்பு கைகளை கழுவுகிறார் பின்பு முகத்தை கழுவுகிறார் இவரது செயல் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதாக இருக்குமா என்று பார்த்தால் இல்லவே இல்லை. ஏனென்றால் இவர் இபாதத்திலே அதனுடைய அமைப்புக்கு  மாற்றமாக செய்திருக்கிறார்.

ஐந்தாவது :  இபாதத் மார்க்கத்தில் அதன் குறிப்பிட்ட  காலத்தில் இருத்தல்.

உதாரணமாக ஒரு மனிதர் ரமலான் நோன்பை ஷஃபானிலே அல்லது ஷவ்வாலிலே நோற்பதை போன்றாகும்.  அல்லது லுஹர் தொழுகையை அதன் நேரத்துக்கு முன்போ அல்லது  நேரத்துக்கு பின்போ தொழுவதை போன்றதாகும். ஏனென்றால் அவர் லுஹருக்கு முன்பு தொழுததும் , பின்பு தொழுததும் அதை அந்த குறித்த  நேரத்தில் செய்ததாக கருதப்படமாட்டாது எனவே இவரது தொழுகை சொல்லப்பட்ட நேரத்திற்கு  மாற்றமாக இருப்பதினால் இவரின் இபாதத் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது .  இதனால் நாம் கூறுகிறோம் ஒரு மனிதர் தொழுகையை மனமுரண்டாக  அதன் நேரம் தாண்டி , தகுந்த  காரணம் இன்றி  விட்டால் அவருடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.  அவர் அந்த தொழுகையை ஆயிரம் முறை தொழுதாலும் சரியே.

நாம் ஒரு முக்கியமான ஒரு அடிப்படையை தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது ஒவ்வொரு இபாதத்தும் நேரம் குறிப்பிடப்பட்டதாகும். எந்த காரணமுமின்றி  குறித்த நேரம் தாண்டி அந்த இபாதத்தை  செய்தால் அது ஏற்றுக்கொள்ளப்படவே மாட்டாது. மாறாக அது மறுக்கப்பட்டதாகும்.  அதற்கு சான்றாக  ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கக்கூடிய ஹதீஸ் " ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் எவர் ஒருவர் எமது மார்க்கத்திலே  இல்லாத ஒரு விடயத்தை செய்கிறாரோ அது மறுக்கப்பட்டதாகும்."

ஆறாவது : இபாதத் மார்க்கத்தில் குறித்த  இடத்தில் அமையப்பெறுவதாகும்.

ஒரு மனிதர் அரபாவுடைய நாளில் முஸ்தலிபாவிலே தரித்திருந்தால் அவருடைய அந்த தரித்தல் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஏனென்றால் அவர் இபாதத்திலே சொல்லப்பட்ட இடத்தில் அவர் தரிக்கவில்லை இதே போன்று உதாரணமாக கூறினால் ஒரு மனிதன் தனது வீட்டிலே இஃதிகாப் இருப்பதைப் போன்றதாகும். அதுவும் அவரிடம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது ஏனென்றால் இஃதிகாப் இருக்கும் இடம் இஸ்லாத்தின் கூறப்பட்டது மஸ்ஜிதாகும்.

 எனவே ஒரு பெண்ணுக்கு அவளுடைய வீட்டில் இஃதிகாப் இருப்பது முறையாகாது. ஏனென்றால் வீடு இஃதிகாப் இருப்பதற்குரிய இடம் அல்ல.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவர்களது மனைவிமார்களில் சிலரை மாதவிடாய் காலத்தில் மஸ்ஜிதிலே கூடாரம் அமைத்து இஃதிகாப் இருப்பதை கவனித்தார்கள், அப்போது நபியவர்கள், அவர்களுக்கு  பள்ளியில் இஃதிகாப் இருப்பதை தடுத்து, கூடாரங்களை நீக்குமாறு ஏவினர்கள். மாற்றமாக அவர்களுக்கு வீட்டிலே இஃதிகாப் இருந்து கொள்ளுமாறு ஏவவில்லை. இந்த சம்பவம் பெண்களுக்கு தமது வீட்டில்  இஃதிகாப் இருக்க முடியாது என்பதற்கு சான்றாக அமைகிறது.

எனவே ஒவ்வொரு இபாதத்தும் அதற்குறிய இடத்தில் இடம்பெறுவது அவசியமாகும்.

மேலகூறப்பட்ட

இந்த ஆறு நிபந்தனைகளும் ஒரு இபாதத்தில் முழுமையாக சேரும் போது தான் அந்த இபாதத் அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறிய பிரகாரம் ஏற்றுககொள்ளப்படக்கூடியதாக  அமையப்பெறும்.

ஆறு நிபந்தனைகள்.

முதலாவது : காரணம்

 இரண்டாவது : வகை

மூன்றாவது  : அளவு

 நான்காவது : அமைப்பு

ஐந்தாவது : காலம்

ஆறாவது : இடம்

 முற்றும்

மூலநூட்கள்

மூலம்

இஸ்லாம் கேள்வி பதில் இணையதளம்

எழுத்து வடிவமைப்பு விருப்பங்கள்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android